காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-1

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-1

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்பதால் பொன்னி என்றும் அதற்கு பெயருண்டு. பூவிரியும் சோலையும், நெல்வயலும் தழைத்தது பல என பழஞ்சரித்திரம் சொல்லும் காவிரி வரலாறு.

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை.தெய்வங்கள், தேவதைகள், பெருமன்னர்கள், பேரரசிகள், மணி கிராமத்தார், திசை ஐனூற்றுவர், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், காமப்பிசாசுகள், துரோகிகள் இவர்களோடு கலைஞர்கள், உழவர்கள், அடிமைகள் என்று எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் - 1


பூம்புகார் நகரம்: கற்பனையா; நிஜமா?!

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூம்புகார் நகரம் 19-ம் நூற்றாண்டில் இருந்த சென்னை அளவுக்கு மிகப் பெரிதாக இருந்திருக்கிறது! பகல் சந்தை... இரவு சந்தை..பெரிய பார்க்குகள்... பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வியாபாரக் கப்பல்கள், அதன் துறைமுகத்தில் நிற்கின்றன.

கருப்பு, வெள்ளை, மஞ்சள் என வித விதமான மனிதர்கள்... பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் நகரமாக அன்றைக்கு பூம்புகார் இருந்திருக்கிறது. உள்நாட்டில் இருந்து படகில் வந்த மிளகு, அகில், முத்து, ரத்தின கற்கள், சந்தனம் எல்லாம் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து குதிரைகள், தங்கம் மற்றும் உலோகப் பொருட்கள், மது போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

நீரினின்றும் நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்தறியா பல பண்டம்
புலி பொறித்துப் புறம் போக்கியதாக..........பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.

மருத்துவமனை, நீதிமன்றம், பட்டிமண்டபம், என எல்லாவற்றுக்கும்  தனித்தனி அரங்குகள், கடியலூர் உருத்திரங்கண்ணனின் பட்டினப்பாலையைப் படிக்கும் போது புலவன் பொய் சொல்கிறானோ எனத் தோன்றும். ஆண்களும், பெண்களும் குடித்துவிட்டு குதூகலமாய் கொண்டாடும் இரவுக்காட்சிகள்... அப்படியே இன்றைய 'பப்' கலாசாரம் போலவே இருக்கிறது. இதெல்லாம் நிஜமா? இப்படி வாழ்ந்த ஒரு இனமும், மக்களும் இவ்வளவு பின்னோக்கி வந்திருக்க வாய்ப்புண்டா? என்கிற ஆதார சந்தேகம் எவருக்கும் வரும். ரோம் அட்டாண்டிஸ் போல பூம்புகாருக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது.

அந்த கதையின்படி பூம்புகார் நகரத்தை கட்டியது..மனிதர்களே அல்ல!

தேவலோகத்தின் தலைநகரான அமராவதிபட்டினத்தை அசுரர்கள் தாக்குகின்றனர். முசுகுந்தன் என்ற சோழ மன்னன், தனது படை வீரர்களுடன் புறப்பட்டு சென்று தேவேந்திரனையும், தேவலோகத்தையும் காப்பாற்றுகிறார். தொடர்ந்து 3600 ஆண்டுகாலம் அங்கேயே இருந்து  காவல் காக்கிறார்கள். இதற்கு பரிசாக தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அனுப்பி பூம்புகார் நகரத்தை தேவேந்திரன் நிர்மானித்தான் என்று ஒரு புராணக்கதை உண்டு. ஆனால்,சரித்திரம் வேறு. அன்று சைவம், வைணவம் எல்லாம் தலையெடுக்கவில்லை. பௌத்தம், சமணம், ஆசிவகம் அகிய மதங்கள்தான் பூம்புகாரின் பெரும்பகுதி மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான இலக்கிய ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. பூம்புகார் நகரத்திலுள்ள கடலை ஒட்டிய கிழக்கு பகுதி மரூவூர்பாக்கம். அங்கேதான் கடலாடிகளும், வணிகர்களும் அவர்களை சார்ந்த மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

உள்நாட்டு வணிகர்கள் மட்டுமல்லாமல் கிரேக்கம், அரேபியா, சீனா, காம்போஜம் என்கிற கம்போடியா, கடாரம் என்கிற இன்றைய மலேசியா, எகிப்து தொடங்கி பல்வேறு நாட்டு வணிகர்களும், அங்கே வணிகம் செய்ய வந்து சென்றதாக, வாழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. சோழர்களின் படையில் யவனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். யவனப்பெண்கள், சோழர்களின் அந்தப்புரத்தில் காவல் வேலை செய்திருக்கிறார்கள். யவனர்கள் என்று சொல்லப்படும் மக்கள் இன்றைய இத்தாலியின் ஒரு பகுதியில் அப்போது வாழ்ந்தவர்கள்.

பூம்புகாரின் மேற்கு பகுதியில் உள்ள பட்டினப்பாக்கம். இங்கேதான் அரசர்கள்,  உயர்அதிகாரிகள், கலைஞர்கள், பெரும் செல்வந்தர்கள் எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் பொழுதுபோக்குக்காக வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பாலை மன்றம், பூத சதுக்கம் என கலைநயமிக்க அரங்கங்கள் இடம்பெற்றிருந்தன.

தவிர இலவந்திகை சோலை, உயவனம், சம்பாவதி வனம், உபவனம், கரோவனம் ஆகிய பூங்காக்கள் என்று கலைநயமிக்க பெருநகரமாக இருந்திருக்கிறது அப்போதைய பூம்புகார். எல்லாம் கி.பி.3-ம் நூற்றாண்டு வரைதான். பல நூறு ஆண்டுகளாக செல்வ செழிப்போடும் செருக்கோடும் இருந்த பூம்புகார் கி.பி.315-ல் உருவான கடற்கோளால் அழிந்துபோனது வரலாற்று சோகம்.

தொடரும்.....

சதுக்க பூதங்களும்...சம்பாபதி அம்மனும்...பாராமுகம் காட்டும் பக்தர்கள்!! விரைவில்...

காவிரி காவிரி சரித்திரம் டாப் தமிழ் நியூஸ் காவிரி 736 காவிரி இரண்டாயிரமாண்டு சரித்திரம் பூம்புகார் நகரம் காவிரி வரலாறு Cauvery Cauvery History Cauvery 736 Top Tamil News Cauvery 2000 years history Puhar
காவிரி736

Leave a comment

Comments