காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-3

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-3

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.
அத்தியாயம் - 3


புதையுண்ட பூம்புகார் மீட்கப்படுமா?


பூம்புகார் நகரம் முறையான பராமரிப்பு இல்லாமல் இன்று பரிதாபமாக காட்சியளிக்கிறது. 2000 வருடத்திற்கு முந்தைய காவிரி பூம்பட்டினம் அப்படியல்ல!! 

மேற்கில் கருவேந்தநாதபுரம், கடாரம் கொண்டான், கிழக்கில் வங்கக்கடல், தெற்கில் திருக்கடவூர், வடக்கில் கலக்காவூர் என்று சொல்லப்பட்ட இன்றைய அண்ணன் பேட்டை வரை பரவி விரிந்திருந்தது காவிரி பூம்பட்டினம். கிழக்கு எல்லை வங்கக்கடல் என்று சொன்னால், இன்றைய கடற்கரை அல்ல.! கடலுக்குள் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் 67 அடி ஆழத்தில் கட்டிடங்களும், இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

சிலப்பதிகாரம் மணிமேகலையையும் தமிழகத்தை அடுத்து இருந்த 'மணிபல்லவம்' என்ற தீவை பற்றியும், அங்கிருந்த மணிமேகலா தெய்வம் பற்றியும் பேசுகின்றன. அந்த மணிபல்லவம் என்பதுதான் இன்றைய இலங்கை நாடா என்பது ஆராய்ச்சிக்குரியது. 

வருடந்தோறும் பூம்புகாரில் இந்திர விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்படியொரு இந்திர விழா இரவில் கோவலன் மாதவியுடன் கடற்கரைக்கு வருகிறான். கடற்கரை வெளியெங்கும் இளைஞர்களும், காதலர்களும் மது அருந்தி உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டிருக்கிறார்கள். மாதவியும், கோவலனும் பாடுகிறார்கள், அந்த பாடலினால் ஏற்படும் ஊடலால் கோவலன் கானல் வரி பாடி மாதவியை விட்டுப் பிரிந்து போகிறான்.

வீட்டிற்கு வந்த பிறகுதான் மாதவியின் காதலில் கட்டுண்டு கிடந்ததால் தனது வணிக சாம்ராஜ்யம் முற்றிலும் அழிந்து, தான் வரிய நிலைக்கு வந்துவிட்டதை உணர்கிறான். அதனை மீண்டும் நிலைநிறுத்த மனைவி கண்ணகியுடன் சம்பாபதி அம்மனை வணங்கிவிட்டு மதுரைக்கு கிளம்புகிறான். காற்சிலம்பு ஒலி மட்டும் உடன் வருகிறது.

மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மணிமேகலையை சோழ இளவல் உதயகுமாரனிடம் இருந்து காப்பாற்றும் மணிமேகலா தெய்வம் அவளைத் தூக்கிக் கொண்டு போய் மணிபல்லவத்தில் வைக்கிறது. அதன்பிறகுதான் பூம்புகார் அழிந்திருக்க வேண்டும். ஏனென்றால், மணிப்பல்லவத்தில் பவுத்த மதத்தை தழுவும் மணிமேகலை, மேற்படிப்பிற்காக காஞ்சி வந்திருக்கும் போதுதான் பூம்புகாரின் அழிவுச் செய்தி அவளுக்கு தெரிகிறது.

தப்பிப் பிழைத்த மாதவியும் மற்றவர்களும் அவளிடம் பூம்புகார் அழிந்த கதையையும், மதுரையில் கோவலன் கொல்லப்பட்ட கதையையும், கண்ணகி மதுரையை எரித்த கதையையும் சொல்கிறார்கள். அந்த அழிவிற்கு பிறகு பூம்புகார் இன்றுவரை தன் அத்தனை மர்மங்களையும் மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் புதைத்து வைத்திருக்கிறது.

என்றாவது ஒரு நாள் தமிழர்கள் தம் பழம்பெருமைகளைத் தேடி வந்து வெளிப்படுத்துவார்கள் என்று காத்திருக்கிறது மவுனமாக!! 

தொடரும்...

திருவெண்காட்டில் பிறந்த பட்டினத்தார், திருவெற்றியூரில் ஜீவசமாதி ஆனது எப்படி?

காவிரி காவிரி சரித்திரம் டாப் தமிழ் நியூஸ் காவிரி 736 காவிரி இரண்டாயிரமாண்டு சரித்திரம் பூம்புகார் நகரம் காவிரி வரலாறு Cauvery Cauvery History Cauvery 736 Top Tamil News
காவிரி736

Leave a comment

Comments