4வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

4வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்திய அணி, 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


அதன்படி டர்பன், செஞ்சூரியன் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் 3 ஆட்டங்களில் முறையே இந்திய அணி 6 விக்கெட்கள், 9 விக்கெட்கள், 124 ரன்கள் வித்தியாசங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூவாண்டரர்ஸ் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர். கடந்த போட்டியை போலவே, இந்தப் போட்டியிலும் ரோகித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ரபடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து, 5 ரன்களில் ரோகித் ஷர்மா அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகர் தவானுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை பதம் பார்த்த இந்த இணை 158 ரன்களை குவித்து அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றது. ஒருநாள் போட்டிகளில் 45-வது அரைசதத்தை கடந்த விராட் கோலி 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரஹானே 8 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் அசத்தலாக விளையாடிய ஷிகர் தவான், ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை விளாசினார். அவர் 105 ரன்கள் எடுத்திருந்த போது மோர்கல் பந்துவீச்சில், டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 9 ரன்கள் மற்றும் புவனேஷ்வர் குமார் 5 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய தோனி 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 290 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபடா மற்றும் நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அந்த அணி 7.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தபோது மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதியில் தடைபட்டது. எய்டன் மார்க்ராம் 22 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.


இந்நிலையில், ஏறத்தாழ 90 நிமிடங்களுக்குப் பின்பு மழை நின்ற பிறகு, டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 202 ரன்களாக மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் டுமினி 10 ரன்களிலும், அம்லா 33 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், டேவிட் மில்லர் – ஹெயின்ரிச் ஜோடி பொறுப்புடன் விளையாடியது.


இதனால் சரிவிலிருந்து தென் ஆப்பிரிக்க அணி கொஞ்சம், கொஞ்சமாக மீளத் தொடங்கியது. அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 39 ரன்களில் சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். ஆனால், அடுத்து வந்த அண்டிலே இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 5 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 23 ரன்களை அவர் குவித்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெயின்ரிச் 43 ரன்களுடனும், அண்டிலே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாண்டியா, சாஹல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணியின் ஹெயின்ரிச் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் தோற்றாலும், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 1 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், 5-வது ஒருநாள் போட்டி வருகிற 13-ஆம் தேதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது.

india south africa cricket virat kohli dhoni team india இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விராட் கோலி
விளையாட்டு

Leave a comment

Comments