தேர்தல் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் மிக அவசியம்: ஜி.கே.வாசன்

தேர்தல் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் மிக அவசியம்: ஜி.கே.வாசன்

சென்னை: தேர்தல் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் மிக அவசியம், அதை தேர்தல் ஆணையம் முழுமையாக கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற தொகுதி. குறிப்பாக சென்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் கோட்பாடுகளை மீறிய செயல்களால் பல வேட்பாளர்கள் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் குறை கூறியதால் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு பெரிய இடைவேளைக்கு பிறகு தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் கட்சியும் வெல்ல முடியவில்லை, எதிர்க் கட்சியும் வெல்ல முடியவில்லை. மேலும் சுயேச்சை வேட்பாளர் வென்றிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தேர்தல் முடிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இறுதியானது என்றாலும் கூட 2-வது முறையாக நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை தாண்டி பணநாயகம்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று மாறி மாறி தொடர்ந்து தேர்தலிலே நின்ற கட்சிகளின் வேட்பாளர்களும், அதனைச் சார்ந்த தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் அளித்தும் கூட பயனில்லை.

இன்றைக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறதே தவிர இந்த தேர்தலை தமிழக மக்கள் சந்தேகத்தோடே பார்க்கிறார்கள். இந்த தேர்தல் இயற்கையாக நடைபெற்றதா, செயற்கையாக நடைபெற்றதா என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. உண்மை நிலையை வாக்காளர்களின் மனசாட்சிக்கு விட்டுவிட்டாலும் கூட காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்கள் - எடைத்தேர்தலாக நடைபெற்றதற்கு காரணம் அந்தந்த சமயங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தான்.

சுதந்திரம் பெற்று சுமார் 67 வருடங்களுக்குப் பிறகு கூட தேர்தல் ஆணையம் கண்டிப்போடு செயல்பட்டு கோட்பாடுகளை கடைபிடிக்க முடியாமல், மீறுகின்ற கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் மீதும் மட்டுமல்ல பொதுத் தேர்தல் மீதும் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். அது மட்டுமல்ல நல்ல கட்சிகளை, நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற கட்சிகளை, தலைவர்களை - ஜனநாயகத்தில் பின்னுக்குத் தள்ளக்கூடிய சூழல் ஏற்படும். இது வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க வழிவகுக்காது. இது ஏற்புடையதல்ல.

எனவே தேர்தல் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் மிக அவசியம், அதை தேர்தல் ஆணையம் முழுமையாக கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.gkvasan rknagar byelection admk dmk election commission ஜிகே வாசன் ஆர்கேநகர் இடைத்தேர்தல் அதிமுக திமுக டிடிவி தினகரன்
தமிழகம்

Leave a comment

Comments