தேர்தல் ஆணையருடன் கமல் சந்திப்பு.... மதுரை அரசரடியில் மாநாடு?

தேர்தல் ஆணையருடன் கமல் சந்திப்பு.... மதுரை அரசரடியில் மாநாடு?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் 15-ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் ஆணையரை சந்தித்து தனது கட்சி பெயரை பதிவு செய்ய இருப்பதாகவும், 21-ம் தேதி மதுரை அரசரடியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில்  இருந்து அரசியல் பிரவேசம் செய்யவுள்ளார். இதற்காக, தனது கட்சியின் பெயர், கொள்கை, கொடி ஆகியவைகளை தீர்மானிப்பதற்காக அவர் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மேலும் அன்றைய தினமே மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்றும், நடைபெற இருக்கும் மாநாட்டில் கமல்ஹாசனின் பேச்சில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற போகின்றன என்பதும் தமிழக மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது அரசியல் வருகை தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை  தொடங்கி வைத்து உள்ளார். மேலும் இது வெறும் இணையதளம் மட்டுமில்லை இது ஒரு பொது தளம்; தன்னை பற்றி ஏதேனும் குறைகள் இருந்தாலும் இதில் தெரிவிக்கலாம் எனவும் அவர் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை பதிவு செய்வதற்காக வருகிற 15-ம் தேதி (நாளை மறுநாள்­) தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாகவும். அன்று தனது  கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 21-ம் தேதி மாலை மதுரை அரசரடியில் உள்ள யூ.சி.மைதானத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மாநாட்டை நடத்த உள்ளார் எனவும் அந்த மாநாட்டில் தென்னிந்திய கமல் ரசிகர்கள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

kamalhassan election commission tamilnadu madurai கமல்ஹாசன் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு
தமிழகம்

Leave a comment

Comments