தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை!

தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை!

போர்ட் எலிசபெத்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.


விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்திய அணி, 6 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


அதன்படி டர்பன், செஞ்சூரியன், கேப்டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.


தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 48-ஆக இருந்த போது பிரிந்தது. ஷிகர் தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். கடந்த போட்டிகளில் சோபிக்காத ரோகித் ஷர்மா, இந்த ஆட்டத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து அணியை வலுவான ஸ்கோருக்கு அழைத்துச் செல்லும் வகையில், கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இந்நிலையில், எதிர்பாராத விதமாக விராட் கோலி 36 ரன்களில் ரன்-அவுட்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஹானேவும் 8 ரன்கள் எடுத்திருந்த போது ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அதேசமயம், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தனது 17-வது சதத்தை விளாசினார். 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 115 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா, நிகிடி பந்துவீச்சில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியாவும், நிகிடி பந்துவீச்சில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.


மள,மளவென விக்கெட்டுகள் சரிந்ததை அடுத்து தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 17 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.


தொடக்க வீரர்களாக அம்லா மற்றும் எய்டன் மார்க்ராம் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஜோடி 50 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. எய்டன் மார்க்ராம் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டுமினி, வந்த வேகத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டிவில்லியர்சும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.


தென் ஆப்பிரிக்க அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அம்லாவுடன் கைகோர்த்த, டேவிட் மில்லர் பொறுப்புணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல உயர ஆரம்பித்தது. ஆனால், இந்த ஜோடியையும் நிலைத்து நின்று ஆட விடாமல் இந்திய அணியினர் பிரித்தனர். சாஹல் வீசிய பந்தில் போல்டு ஆகி, 36 ரன்னில் வெளியேறினார் டேவிட் மில்லர். இதற்கிடையில், மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்லா 71 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்திக் பாண்டியாவால் ரன்-அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.


இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 42.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்டியா மற்றும் சாஹல் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது.

team india virat kohli cricket rohit sharma south africa 5th odi இந்திய அணி விராட் கோலி கிரிக்கெட் ரோகித் ஷர்மா தென் ஆப்பிரிக்கா
விளையாட்டு

Leave a comment

Comments