‘நடுவிரல்’ ஈமோஜியை நீக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு டெல்லி வழக்கறிஞர் நோட்டீஸ்

‘நடுவிரல்’ ஈமோஜியை நீக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு டெல்லி வழக்கறிஞர் நோட்டீஸ்

டெல்லி:  வாட்ஸ்அப் செயலியில் உள்ள நடுவிரல் ஈமோஜியை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
 
உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் தகவல்களை எளிதில் பரிமாறிக் கொள்வதுடன், புகைப்படங்கள், வீடியோ, கோப்புகள் ஆகியவற்றையும் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலான ஏராளமான 2டி பொம்மைகளும் வாட்ஸ்அப் செயலியில் உள்ளன. இவை ஈமோஜிக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
அவற்றில் நடுவிரல்காண்பிக்கும் ஈமோஜி ஒன்றும் உள்ளது. வெறுப்பு உணர்ச்சியை வெளிக்காட்டுவதற்காக பலரும் இந்த ஈமோஜியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் நடுவிரல் ஈமோஜியை 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த குர்மீத் சிங் என்ற வழக்கறிஞர் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
  
இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 கீழ் மற்றவர்களை அவமதிக்கும், சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பெண்களிடம் பயன்படுத்துவது குற்றம் ஆகும். மேலும், மற்றவர்களிடம் கீழ்த்தரமான சைகைகளை பயன்படுத்துவதும் சட்ட விரோத நடவடிக்கை தான். வாட்ஸ்அப் செயலியில் நடுவிரல் எமோஜியை இடம்பெற செய்துள்ளதன் மூலம் தண்டனைக்குரிய, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட வாட்ஸ்அப் நிறுவனம் நேரடி உடந்தையாக இருக்கிறது என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவிரல் ஈமோஜியை 15 நாட்களுக்குள் நீக்கவில்லை என்றால் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீஸில்  எச்சரிக்கப்பட்டுள்ளது

whatsapp delhi notice india வாட்ஸ்அப்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments