மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: ஸ்தம்பித்தது மும்பை; போலீசார் குவிப்பு

மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: ஸ்தம்பித்தது மும்பை; போலீசார் குவிப்பு

மும்பை: பீமா கோரேகான் கவலரத்தையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களுக்கும் மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா பிராமண மன்னருக்கும் இடையே போர் நடைபெற்றது. பீமா கோரேகான் எனும் இந்த போரில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆதரவாக மகார் என்ற தலித் இன மக்கள் களமிறங்கினர். போரில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் வெற்றி பெற்றனர். போர் வெற்றியின் நினைவாக நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. ஆண்டு தோறும் ஜனவரி 1-ம் தேதியன்று நினைவுத் தூண் அருகே கூடும் அச்சமூகத்தினர் போர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற 200-வது ஆண்டு போர் நினைவு தின வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனை கண்டித்து புனே, மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்று ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உட்பட பல நகரங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அதேபோல், பெரும்பாலான வாகனங்களும் இயக்கப்படாததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhima Koregaon Mumbai Violence Shutdown Protest Rail stir பீமா கோரேகான் போராட்டம் மும்பை
இந்தியா

Leave a comment

Comments