தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்ப பெறுக: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்ப பெறுக: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச சுகாதார வசதி என்ற சர்வதேச அளவிலான அனைத்து நாடுகளின் பிரகடனத்தை ஏற்கனவே மத்திய அரசு ஏற்று இந்தியாவில் அமலாக்குவோம் என்று காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிவித்தது, ஆனால் அமலாக்கவில்லை. தற்போது மொத்தத்தில் மருத்துவக் கல்வியையும், சுகாதார வசதியையும் தனியாருக்கு ஒப்படைக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தான் இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து விட்டு “தேசிய மருத்துவ ஆணையம்” அமைத்திட பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. 

இந்த ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள் இவர்களில் 5 உறுப்பினர்களை தவிர தலைவர், செயலாளர் உள்ளிட்டு மற்ற உறுப்பினர்களை மத்திய அரசாங்கம் நியமனம் செய்யும். இதில் பெரும்பாலோர் மருத்துவர் அல்லாதவர்களாக இருக்கவும் மசோதாவில் சரத்து உள்ளது. மேலும் தலைவர் உட்பட யாரை வேண்டுமென்றாலும் பதவியிலிருந்து நீக்கவும் மசோதா மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. டாக்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாறாக நியமனம் செய்யப்படும் மருத்துவ ஆணையம் அமைப்பது எதேச்சதிகாரமானது, மாநில உரிமைகளை பறிக்கக் கூடியதுமாகும். 

ஏற்கனவே பல மத்திய அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளது. மருத்துவ தேசிய ஆணையத்திலும் சங்பரிவார நபர்களை நியமித்து ஒட்டுமொத்தமாக அகில இந்திய மருத்துவ நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு, அவ்விடத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தை நியமிக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மசோதாவை எதிர்த்து  நாடு முழுவதும் மருத்துவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். 

மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய, இட ஒதுக்கீட்டை மறுக்கக் கூடிய, மருத்துவக் கல்வியையும், மருத்துவ சேவையையும் தனியார்மயமாக்கக் கூடிய, அகில இந்திய அளவிலான மருத்துவ நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடுக்கப்படும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது; இந்த மசோதாவை உடனடியாக திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது

G Ramakrishnan CPM
தமிழகம்

Leave a comment

Comments