தினகரன் பேசும் போது இடைமறிக்கக் கூடாது: முதல்வர் பழனிசாமி அறிவுரை

தினகரன் பேசும் போது இடைமறிக்கக் கூடாது: முதல்வர் பழனிசாமி அறிவுரை

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் டிடிவி தினகரன் பேசும் போது அதிமுக எம்எல்ஏ-க்கள் இடைமறிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 8-ம் தேதி காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டதொடரும், ரோசய்யாவுக்குப் பிறகு தமிழகத்துக்கான முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின்னர், அவரது உரையுடன் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், அதிமுக-வில் இரு அணிகள் ஒருங்கிணைப்புக்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்குள் முதன்முறையாக செல்லும் கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்டத்தொடர் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 104 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர். உடல்நலக் குறைவு, சபரிமலை பயணம் உள்ளிட்ட காரணங்களால் சில எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்ளவில்லை. அது தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டதில் எவ்வாறு நடந்து கொள்வது, எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையில் ஜனநாயக மாண்புகளை பாதுகாக்கும் வகையில் எம்எல்ஏ-க்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கூட்டத்தொடரில் டிடிவி தினகரன் கன்னிப் பேச்சு பேசும்போது எம்.எல்.ஏக்கள் இடைமறிக்கக் கூடாது. அரசுக்கு எதிராக தினகரன் விமர்சனம் செய்தால் எம்.எல்.ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது. அரசு கொறடா உத்தரவை கடைபிடிக்க வேண்டும். மக்கள் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

அதிமுக அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவை AIADMK ADMK MLAs TTV Dhinakaran Edappadi palanisamy O Panneerselvam
தமிழகம்

Leave a comment

Comments