பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு: சிவகாசியில் முழு கடையடைப்பு போராட்டம்

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு: சிவகாசியில் முழு கடையடைப்பு போராட்டம்

சிவகாசி: பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிவகாசியில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..

பட்டாசு வெடிப்பதால் சுற்றுபுறச் சூழல் பாதிக்கப்படுவதாகவும் அதனால் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. இதற்கிடையே பட்டாசுக்கு தடை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பட்டாசு ஆர்டர்களை வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் நிறுத்திவிட்டனர். இதனால் பட்டாசு தொழில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும், பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது, பட்டாசுக்கு தடை விதித்தால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த 26-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி  உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்களின் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிவகாசியில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அங்கு பேரணியும் நடைபெற்றது.

Sivakasi Crackers Protest சிவகாசி பட்டாசு
தமிழகம்

Leave a comment

Comments