ஆடி பூரத்தின் மகிமைகள்

ஆடி பூரத்தின் மகிமைகள்

ஆடி பூரம்:  ஆடி பூரத்தின் முக்கியத்துவங்களை பற்றி இந்த பதிவில் பார்போம்.

ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் உதித்தாள். பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஆண்டாள், பக்தியின் மூலமாக நாம் எப்படி இறைவனை அடைய முடியும் என்பதை வாழ்ந்து காட்டி உணர்த்தினாள். 

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 


இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். 



அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். 



திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி  அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.



ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி  ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம். பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


#Aadi Pooram  #Srivilliputhur  #ஸ்ரீவில்லிபுத்தூர்   #ஆடி பூரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடி பூரம் ஆண்டாள் உமாதேவி மன்னார்குடி Aadi Pooram Srivilliputhur
ஆன்மிகம்

Leave a comment

Comments