தமிழ்நாட்டில் பாதியாக குறைந்து போன வெளிநாட்டு முதலீடு - ராமதாஸ் வேதனை

தமிழ்நாட்டில் பாதியாக குறைந்து போன வெளிநாட்டு முதலீடு - ராமதாஸ் வேதனை

சென்னை:  கடந்த ஆண்டு மற்ற மாநிலங்களில் வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகம் உள்ள முதலீட்டையும் பெற முடியாமல் 51 சதவீதம் இழந்துள்ளது என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் தொழில்துறை முதலீடுகள் மிக மோசமான அளவுக்கு குறைந்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்திய மாநிலங்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டிற்கு கடந்த 2016-17 ஆம் ஆண்டில் வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு அதற்கு முந்தைய ஆண்டின் அளவில் பாதியாகக் குறைந்து விட்டது.

2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.28,608 கோடி (452 கோடி அமெரிக்க டாலர்) வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் இது ரூ.13,987 கோடியாக (221 கோடி டாலர்) குறைந்து விட்டதாகவும், இது முந்தைய ஆண்டின் வெளிநாட்டு முதலீட்டை விட 51.11% குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதேகாலக்கட்டத்தில் மேற்கு மாநிலங்களின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் நேரடி முதலீட்டு அளவு ரூ.14,000 கோடியிலிருந்து ரூ.21,266 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மாராட்டியம், தாத்ரா நாகர் மற்றும் ஹாவேலி, டாமன் -டையூ ஆகியவற்றுக்கான முதலீட்டின் அளவு ரூ.60,127 கோடியிலிருந்து, ரூ.1,24,051 கோடியாக உயர்ந்துள்ளது.

அதாவது தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், குஜராத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51.90% அளவுக்கு உயர்ந்துள்ளது. மராட்டிய மண்டலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு 106.40% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் எந்த அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.

இதுமட்டுமின்றி, இந்திய மாநிலங்களுக்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்து கோட்டக் வங்கிக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தமிழகத்தின் தனியார் நிறுவனம் வெளிநாட்டு நேரடி முதலீடு கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.2.83 லட்சம் கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீட்டின் அளவு ரூ.8366 கோடி, அதாவது 2.9% மட்டுமே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது 2015-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கிடைத்த ரூ.36,686 கோடி முதலீட்டில் கால்வாசிக்கும் குறைவாகும். இதே காலக்கட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு ரூ.51,823 கோடியிலிருந்து, ஒரு லட்சத்து 29,697 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.16,138 கோடியிலிருந்து ரூ.20,666 கோடியாகவும், ஆந்திராவுக்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.6794 கோடியிலிருந்து ரூ.14,438 கோடியாகவும் உயர்ந்துள்ளன.

தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் குவிந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்து வகையான முதலீடுகளும் குறைந்து வருவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உரிய அனைத்து சூழல்களும் உள்ளன.

அற்புதமான மனித வளமும் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் முன்வராததற்கு காரணம் தமிழகத்தில் நிலவும் ஊழல் தான். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் தொகையில் 40% வரை கையூட்டாக வழங்க வேண்டும் என்று தமிழக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துவது தான் தமிழகத்தில் முதலீடு குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த கியா மகிழுந்து நிறுவனம் உள்ளிட்ட பல தமிழகத்திலிருந்து வெளியேறுவதற்கும் கையூட்டு கேட்டு ஆட்சியாளர்கள் நெருக்கடி கொடுத்தது தான் காரணம் ஆகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தொழில் வளம் என்பதே இல்லாமல் போய்விடும்; வேலைவாய்ப்புத் திண்டாட்டம் பெருகிவிடும். இத்தகைய சூழலில் தமிழகத்தில் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

தமிழகத்தின் நலனை அடகு வைத்து, தங்களின் சொந்த நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்கள் திருந்துவதோ, தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் ஈடுபடுவதோ சாத்தியமற்றது. இன்றைய நிலையில் இந்த ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டியடிப்பதன் மூலம் மட்டுமே தமிழகத்தை அது எதிர்கொண்டு வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற முடியும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

tamilnadu ramadoss business invesment pmk தமிழ்நாடு ராமதாஸ் தொழில் முதலீடு
தமிழகம்

Leave a comment

Comments