ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்

 ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 26-ந் தேதியுடன் மண்டல பூஜை நிறைவுபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 26-ந் தேதி இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. 

பின்னர் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் 12-ம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11ம் தேதி எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதன்பின்னர் ஜனவரி 14ம் தேதி சிறப்பு வாய்ந்த மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.

இதைக்காண தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடாக மற்றும் பிற மாநிலங்களை லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆள் இல்லாத குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

sabari malai ayyappan temple kerala makara vilakku devotees சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளா மகரவிளக்கு
ஆன்மிகம்

Leave a comment

Comments