இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் 100-வது செயற்கைகோளை விண்ணில் ஏவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதனை புவிவட்ட சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி ஆய்வு, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

அதன்படி, இந்தியாவில் இதுவரை 99 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 செயற்கைகோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்து வந்தனர். 710 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் மூலம் ஜனவரி 12-ம் தேதி (இன்று) விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவின் ஷிகார்தவான் ஏவுதளத்தின் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து கார்ட்டோசாட்-2 உள்பட 1,323 கிலோ எடை கொண்ட மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இதில் கார்ட்டோசாட்-2 தவிர ஒரு நானோ மற்றும் ஒரு மைக்ரோ என 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவினுடையது. இதர 28 செயற்கைக் கோள்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளுக்குரியவை.

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 17.33 நிமிடங்களில் 31 செயற்கைக் கோள்களும் அதனதன் சுற்றுப் பாதைகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2 சுமார் 510 கி.மீ. உயரத்தில் அதன் புவி வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

கார்டோசாட்-2 செயற்கைக்கோளில் துல்லியமாக படமெடுக்கும் கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே,  பூமியின் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படமெடுத்து அனுப்பும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள சிவன் கூறுகையில், "கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர்ப்புற உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த செயற்கைக்கோள் தரும் தகவல்கள் உதவியாக இருக்கும். அத்துடன் இந்திய ராணுவத்துக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க உள்ளது என்றார்.

இந்தியாவின் 100-வது செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப் பட்டதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ISRO Satellite Space Rocket PSLV இஸ்ரோ விண்வெளி ஆராய்சி ராக்கெட்
இந்தியா

Leave a comment

Comments