லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கலாம் - ராமதாஸ் எச்சரிக்கை

லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கலாம் - ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் எந்த நேரமும் மக்கள் புரட்சி வெடிக்கலாம். எனவே, அபத்தமானக் காரணங்களை இனியும் கூறிக் கொண்டிருக்காமல் வரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தட்டிக் கழிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படாதது பற்றி முதல்வர் பழனிச்சாமி அளித்த விளக்கங்கள் அபத்தமானவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை. 2013-ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதனால் முதன்மை சட்டத்துடன் முரண்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது அலைகள் ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம் என்கிறார். இது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா வருவதும் சாத்தியமில்லை என்பது தான் இதன் பொருளாகும்.

லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத நிலையில்,  லோக்பால் தேர்வுக்குழுவின் உறுப்பினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரியக் கட்சியின் தலைவர் என்று மாற்றுவதற்காக   லோக்பால் சட்டத்தின் 4(1)(C) பிரிவிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக 44-ஆவது பிரிவிலும்  மட்டுமே திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

இதற்கான சட்டத்திருத்த முன்வரைவு மக்களவையில் கடந்த 27.07.2016 அன்று நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வில் உள்ளது. அடுத்தக் கூட்டத் தொடரில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படக்கூடும். ஒருவாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்,  லோக்பால் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்ட நிலையில், அதற்காக காத்திருப்பதாகக் கூறி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற மறுப்பது நியாயமல்ல.

இதற்கெல்லாம் மேலாக மத்திய அரசின் சட்டத்திற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் என்று பெயரிடப்பட்டாலும் அதிலுள்ள பிரிவுகள் லோக்பால் தொடர்பானவை மட்டுமே. லோக் ஆயுக்தா அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?, அதன் அதிகார வரம்பு என்ன? என்பது குறித்தெல்லாம் அச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டுக்குள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படாத மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டு லோக் ஆயுக்தா  ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் லோக்பால் சட்டத்தின் 63-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா மாநில அளவிலான அமைப்பு என்பதால் அதன் அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதன்படி இயற்றப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு சட்டம் லோக்பால் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தாலும் கூட அதில் எந்தவித சிக்கலும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசு சட்டத்துடன் முரண்பாடு ஏற்படும் வகையில் தமிழக அரசு சட்டம் அமைந்து விடக் கூடாது என காத்திருப்பதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

அதுமட்டுமின்றி, லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக காத்திருக்காமல் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை செயல்படுத்தும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 27.04.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும், 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர பினாமி ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள் என்றால், அதற்கு காரணம் லோக் ஆயுக்தா வந்தால் அதற்கு தாங்கள் முதல் பலியாகி விடுவோமோ? என்ற அச்சம் தான் காரணம். ஊழலை மூலதனமாகக் கொண்டவர்கள் ஊழல் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வருவர் என எதிர்பார்ப்பது சூரியன் மேற்கே உதிக்கும் என்பதற்கு ஒப்பானது தான்.

ஆனாலும், திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் எந்த நேரமும் மக்கள் புரட்சி வெடிக்கலாம். எனவே, அபத்தமானக் காரணங்களை இனியும் கூறிக் கொண்டிருக்காமல் வரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற பினாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.


Ramadoss PMk Lokayukta Tn government cm scam ராமதாஸ் பாமக லோக் ஆயுக்தா தமிழக அரசு முதல்வர்
தமிழகம்

Leave a comment

Comments