ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கைத் தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கைத் தமிழ் அகதி

கொழும்பு: போர் முடிவுற்ற பின்னரும் இலங்கையில் பாதுகாப்பில்லை என  படகு வழியாக ஆஸ்திரேயாவில் தஞ்சமடைந்திருந்த ராஜா என்ற  தமிழ் அகதி இலங்கைக்கே நாடு கடத்தப்படும் அபாயத்தில் சிக்கியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரி அவர் சமர்பித்திருந்த விண்ணப்பம் எவ்வித ஆய்வுக்கும் எடுத்துக் கொள்ளப்படாமலேயே, காலக்கெடு முடிந்துவிட்டதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆஸ்திரேலியாவில் ஓர் அகதியின் விண்ணப்பம் பரிசீலணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமலேயே அவர் நாடு கடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தற்போது அவர் வில்லாவுட் தடுப்பு முகாமில் கைவிலங்கிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஆஸ்திரேலிய அரசிடம் பாதுகாப்புக் கோரும் விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காத தஞ்சக்கோரிக்கையாளர்கள் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஒருபோதும் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அவர்கள் அகதியா? இல்லையா? என்பதை தீர்மானிக்க விண்ணப்பதில் கோரப்படும் தகவல்களை வழங்க வேண்டும், கேள்விகளுக்கு பதலளிக்க வேண்டும்” என கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் அறிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கோரி வந்துள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள், முறையான சட்ட உதவிக்காக அகதி சட்ட மையத்தில் நீண்ட காலமாக காத்திருக்கூடிய சூழல் நிலவுகின்றது. இந்த நிலையில் ‘பாஸ்ட்- டிராக்’ நடைமுறையின் கீழ் தஞ்சக்கோரிக்கைக்கான புதிய விண்ணப்பங்களை அளித்த பலர், சாதாரண நடைமுறையின் கீழ் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் மேல்முறையீடு அம்சங்களை இழக்கின்றனர். 

அந்த வகையில், 41 பக்கம் கொண்ட ஆங்கில விண்ணப்பத்தை நிரப்ப போராடிய ராஜா என்ற தமிழ் அகதி, காலக்கெடுவிற்குள் அவ்விண்ணப்பத்தை நிரப்பும் சட்ட உதவியினை பெறமுடியவில்லை. இவரைப் போல் ஏழாயிரம் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ராஜாவைப் போன்று 71 பேர் தங்கள் விண்ணப்பங்களை  காலக்கெடுவிற்குள் சமர்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர்களின் விண்ணப்பம் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு சட்ட உதவி வழங்கிய Refugee Advice and Casework Service அமைப்பின் தலைமை வழக்கறிஞர், சாரா டலே, “ஆஸ்திரேலியா ஓர் ஆபத்தினை முன்னுதாரணத்தை அமைக்க எண்ணுகின்றது. ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களின் வழக்கை பரிசீலித்த அடிப்படையில் ராஜா என்ற இளைஞனின் வழக்கு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்குவதற்கான நம்பகமான வழக்காகும். ஆனால் குடிவரவுத்துறை காலக்கெடுவிற்குள் வழங்கவில்லை என சுருக்கமாக தங்களது பதிலை வழங்கியுள்ளனர்” என வேதனைத் தெரிவித்திருக்கிறார். 

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு தமிழர்கள் நாடுகடத்தப்படும் நிலையைப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையின் பேச்சாளர், “தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச கடமையின் கீழ் உள்ளடக்கூடிய எவரையும் நாங்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த ஐ.நா. சிறப்பு அதிகாரி பென் எம்மெர்சன், தேசியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இன்றும் பலர் கைது செய்யப்படுவதும், சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடப்பதாகக் கவலைத் தெரிவித்திருந்தார். இப்படியான சுழலில் அவ்வப்போது தஞ்சக்கோரும் தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருவது அச்சத்திற்குரியதாகப் பார்க்கப்படுகின்றது. 


Sri Lanka refugees australia இலங்கை அகதிகள்
உலகம்

Leave a comment

Comments