“ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் செய்றான்” – ‘அடிமை அதிமுக’ விமர்சனத்திற்கு எடப்பாடி விளக்கம்!
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்தது. அந்தக் கூட்டணி தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் வரை தொடர்கிறது. பாஜகவின் கைப்பாவையாகவும் அடிமையாகவும் அதிமுக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் விமர்சித்துவருகின்றனர். பொதுமக்களும் பங்கம் வைக்காமல் மாநில உரிமைகளை எடப்பாடி விட்டுக்கொடுக்கிறார் என விமர்சனம் வைத்தனர்.

இதனை ஒரு கட்டத்தில் அதிமுகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு எதிராக அவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியும் அதிமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்து சட்டத்திருத்தம் நிறைவேற காரணமாக இருந்தனர். ஏன் என்ற கேள்விக்கு எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை; பாஜகவின் அழுத்தத்தின் பெயரில் வாக்களித்தோம் என்று வெளிப்படையாகவே அதிமுக எம்பிக்கள் கூறினர்.

இச்சூழலில் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு மாநில உரிமைகளை அப்பட்டமாக மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைப் பெருமையாகப் பேசியிருக்கிறார். அதற்கு அவர் அளித்த விளக்கம் தான் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. விருதாலச்சலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “மத்திய அரசிடம் அதிமுக அரசு அடிபணிந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். மத்திய அரசு ஒரு சக்கரம் என்றால் மாநில அரசு ஒரு சக்கரம். இரு சக்கரங்களும் ஒன்றிணைந்தால் தான் வண்டி சரியாக ஓடும்.

மத்திய அரசுடன் இணக்கமாகப் போகும் பட்சத்தில் தான் மாநில அரசுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அப்போது தான் மாநிலம் வளர்ச்சியடையும். மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும். புதிய திட்டங்களை அறிவிப்பதும் அனுதியளிப்பதும் மத்திய அரசின் வேலை. அதை நடைமுறைப்படுத்துவது மாநில அரசு” என்றார்.
இணக்கமாகப் பேசி தமிழ்நாட்டிற்கு என்ன அணுகூலம் கிடைத்துள்ளது என்பது முதல்வருக்கே வெளிச்சம். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு செங்கலுடன் நிற்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல கோடிக்கணக்கிலான ஜிஎஸ்டி வரி வருவாய் வந்த பாடில்லை. புயல் நிவாரண நிதியும் போதுமான அளவு வரவில்லை. இத்தனை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது எதிர்க்கட்சிகள் இல்லை. இதையெல்லாம் கேட்டு கடிதம் எழுதியவே எடப்பாடி தான்.