“ஜெயலலிதாவுக்கே குழி பறிச்சவரு அந்த அமைச்சரு… சாதாரணமா எட போட்டுராதீங்க” – அலர்ட் செய்யும் ஸ்டாலின்!
திமுக வேட்பாளர்களையும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து திமுக தலைவர் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சாரம் செய்யப் போகும் இடங்களில் அதிமுகவையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கவனம் செலுத்தி கடும் விமர்சனத்தை முன்வைத்து டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று மக்களிடம் கோருகிறார். அந்த வகையில் அமைச்சர் ஜெயக்குமாரின் கோட்டையான ராயபுரத்தில் பிரச்சாரம் செய்தார்.

திமுக வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், “ராயபுரத்தில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்ட வேண்டும். தோல்வி என்றால் உங்க வீட்டு தோல்வி, எங்க வீட்டு தோல்வி இல்ல. படுதோல்வியடைய செய்ய வேண்டும். டெபாசிட்டே கிடைக்க கூடாது. அதற்காகத் தான் உங்களை தேடி வந்திருக்கிறேன். அவரைச் சாதாரணமான ஆள் என்று நினைத்து விடாதீர்கள். பலே கில்லாடி அவர். ஜெயலலிதாவுக்கு குழி பறிக்க பார்த்தவர் அவர். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா இதே ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் விடுவார் என்று நினைத்து, முதலமைச்சர் இடத்தை நான் தான் நிரப்பப் போகிறேன் என்று பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர் தான் ஜெயக்குமார். இந்தச் செய்தி ஜெயலலிதாவுக்கு தெரிந்து, சபாநாயகர் பதவியையும் பறித்த கதைதான் ஜெயக்குமாரின் கதை. இப்போது எடப்பாடியின் பிஆர்ஓவாக வேலை செய்கிறார்” என்றார்.