பிரச்சாரத்தில் திமுகவை மட்டும் வசைப்பாடும் டிடிவி தினகரன்! அதிமுகவுடன் இணக்கமா?
பழனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் திரு.வீரக்குமார், ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திரு.சிவக்குமார் ஆகியோரை ஆதரித்து ஒட்டன்சத்திரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மீண்டும் சூறையாடப்படும். மக்களின் செல்வங்களும் சூறையாடப்படும். மக்களுக்காக உழைக்கக்கூடியவர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும், குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே முதலீடாக வாக்குக்கு பணம் தருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றித்தர குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஒட்டன் சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி, முருங்கைப்பவுடர் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தபால் வாக்குகளை பெறுவதற்கு கூட காவலர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை திமுகவினர் வழங்கியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்புகள் மீண்டும் நடக்கும், கோவையில் திடீரென ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ய காரணம் என்ன? அமைச்சருக்கு வேண்டிய அதிகாரி காரில் இருந்து ரூ.50 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழின துரோகிகளுக்கு முடிவு கட்ட அமமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஒட்டன் சத்திரம் தொகுதி வளர்ச்சிக்கு திமுக ஏதாவது செய்ததா? என்பதை மக்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். தமிழின துரோகிகளுக்கு முடிவு கட்ட அமமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் உடைமைகள்தான் பறிபோகும்” எனக் கூறினார்.