இன்போசிஸ் லாபம் ரூ.6,021 கோடி... பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.16.50 அறிவிப்பு
இன்போசிஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.6,021 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.6,021 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 11.1 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,421 கோடி ஈட்டியிருந்தது.

2022 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.36,538 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.4 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.29,602 கோடி ஈட்டியிருந்தது. இன்போசிஸ் நிறுவனம் ரூ.9,300 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.16.50 அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இன்போசிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.82 சதவீதம் உயர்ந்து ரூ.1,474.05ஆக இருந்தது.


