திருச்சி அருகே லாரி மோதி தொழிலாளி பலி!
திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த தொழிலாளி மீது, லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள மேலவெட்டி நடுதெருவை சேர்ந்தவர் வீரமணி. உத்தமர்சீலி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் குமார்(56). நண்பர்களான இருவரும் நேற்றிரவு கல்லணையில் இருந்து உத்தமர்சீலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி - கல்லணை சாலையில் கிளிக்கூடு அருகே சென்றபோது, எதிரே உத்தமர்சீலியை சேர்ந்த வீரமலை என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் வாகனத்தில் இருந்து 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது, திருச்சி நோக்கி சென்ற லாரி வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீதும் மோதியது. இதில் வீரமணி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமார், வீரமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார், விபத்தில் பலியான வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் நிலக்கோட்டையை சேர்ந்த தேவராஜ் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

