பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை உயிரிழப்பு
அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம் என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெங்களூருவில் சேதனா ராஜ் (வயது 21) என்ற சின்னத்திரை நடிகை கீதா, தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய கன்னட மொழி சீரியலில் நடித்துள்ளார். ஹவயாமி எனும் கன்னட படத்திலும் நடித்துள்ளார். சேதனா ராஜ்-க்கு படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தனது அழகை அறுவை சிகிச்சை மூலமாக மாற்றி அமைக்க அவர் முடிவு செய்து பெங்களூரு நகரில் டாக்டர் செட்டி மருத்துவமனையில் நேற்று பெற்றோர்களின் சம்பந்தம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள சேர்ந்துள்ளார். நேற்று மெல்வின் என்ற மருத்துவர் நடிகைக்கு நெஞ்சு பகுதியில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்த போது திடீரென நடிகைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவர் மெல்வின் நடிகையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தான் சொல்வது போல சிகிச்சை அளிக்க வலியுறுத்தி உள்ளார். ஆனால் சேதனா ராஜ் அங்கு அழைத்து வரப்படும் போதே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் செட்டி மருத்துவமனையில் நடிகைக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு இல்லை. மேலும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அஜாக்கிரதையாலே எனது மகள் உயிரிழந்துள்ளார் என சேதனா ராஜின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் நீர் தங்கியிருந்ததாலே இறப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.