டெல்லியின் பொருளாதார வளர்ச்சி, தேசிய சராசரி வளர்ச்சியை காட்டிலும் அதிகம்.. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியின் பொருளாதார வளர்ச்சி, தேசிய சராசரி வளர்ச்சியை காட்டிலும் அதிகம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் 2023-24ம் நிதியாண்டுக்கான டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். டெல்லி நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கைலாஷ் கெலாட் முதல் முறையாக டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், இது ஆம் ஆத்மி அரசாங்கம் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: எதிர்வரும் ஆண்டுக்கான பட்ஜெட் தூய்மையான?, அழகான மற்றும் நவீன டெல்லியை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது, இந்த துறைக்கு சுமார் ரூ.21 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் டெல்லியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.18 சதவீதமாக இருக்கும், இது மதிப்பிடப்பட்ட தேசிய வளர்ச்சி விகிதமான 7.0 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நேற்று ஆம் ஆத்மி அரசாங்கம் டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

