சாகித்திய அகாடமி பெற்ற "இலக்கிய சாம்ராட்" கோவி.மணிசேகரன் மறைந்தார்!

 
கோவி மணிசேகரன்

சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் இன்று மறைந்தார். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வயது 94. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். குறிப்பாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் மற்றும் கன்னடத்தில் தென்னங்கீற்று என்ற படத்தையும் தமிழில் மட்டும் வெளியான யாகசாலை என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.கோவி மணிசேகரன்

1992ஆம் ஆண்டு கோவி.மணிசேகரன் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் பணியாற்றியுள்ளார். தவிர்க்க முடியாத எழுத்தாளராகவும் வலம் வந்தார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1992ஆம் ஆண்டு இவரது வரலாற்றுப் புதினமான "குற்றாலக் குறவஞ்சி" -க்கு தான் சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று - 2 மொழிகளில் படமாகியது || cinima  history

இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர் மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்‌ஷே விருதும் பெற்றது. தினத்தந்தியின் சி. பா. ஆதித்தனார் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. அக்னி வீணை, அக்னிக்கோபம், அரண்மனை ராகங்கள், அழகு நிலா, அஜாத சத்ரு, ஆதித்த கரிகாலன் கொலை, இந்திர விஹாரை, இளவரசி மோகனாங்கி, எரிமலை, கங்கை நாச்சியார் உள்ளிட்ட 50 வரலாற்றுப் புதினங்கள் எழுதியிருக்கிறார். இவருக்கு இலக்கிய சாம்ராட் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.