‘தோழியுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டல்’ தேசிய விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்..
தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் இசையமைப்பாளாராக புகழ்பெற்றவர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன். மலையாள திரையுலகைச் சேர்ந்த இவர் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற தமிழ் படங்களும், ‘கல்கி’, ‘ரங்கஸ்தலம்’ போன்ற தெலுங்கு படங்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளரகாவும் இருந்து வரும் ராஜா கிருஷ்ணன் ‘ரெங்கஸ்தலம்’ படத்திற்காக 2019 ஆம் ஆண்டு சிறந்த ஒலி வடிவமைப்புக்காக தேசிய விருதும் பெற்றார்.
இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் ராஜா கிருஷ்ணனின் மனைவி திருமங்கலம் அனைத்து காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது திருமணத்தை ரூ.40 லட்சம் செலவில் நடத்தியதாகவும், ஒவ்வொரு முறை ராஜா கிருஷ்ணன் கேட்டபோதும் தனது பெற்றோரிடம் இருந்து வாங்கி லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 225 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தனியார் ஓட்டல் உரிமையாளரான சைனி ஜோமன் என்பவரோடு திருமணத்தை தாண்டிய உறவு கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து தெரிய வந்து கண்டித்த காரணத்தினால் பிரிந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து 15 லட்ச ரூபாய் பணத்தை ராஜா கிருஷ்ணன் மற்றும் சைனி ஜோமன் எடுத்துக்கொண்டதாக புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன் நகைகளை ஏமாற்றி விற்பனை செய்து சைனி ஜோமன் ஹோட்டல் ஆரம்பிக்க உதவியிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் தனது கணவர் அந்தரங்கமாக தன்னை எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரளித்துள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து பணம் கேட்டு கணவரான ராஜா கிருஷ்ணன் மற்றும் அவரது பெண் தோழி சைனி ஜோமன் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக தனது திருமண வாழ்க்கையும் அபகரித்து, தன் சொத்துக்களையும் பணத்தையும் அபகரித்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ராஜா கிருஷ்ணன் மற்றும் சைனி ஜோமன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ராஜா கிருஷ்ணன், முன்கூட்டியே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஹோட்டல் அதிபரான சைனி ஜோமனை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில், பணம் கேட்டு மிரட்டியது உறுதியானதால் சைனி ஜோமனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ராஜா கிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்