×

‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’... சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த முதியவர்

 

ஆண்டிப்பட்டி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்தச் சிறுமி வசிக்கும் வீட்டின் எதிரில் கூலி வேலை செய்யும்  குருவையா (வயது 55) என்பவர் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த அந்த சிறுமியை அழைத்த குருவையா தனக்கு தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். தண்ணீர் கொடுக்க குருவையா வீட்டிற்குள் அந்த சிறுமி சென்றவுடன் வீட்டின் கதவை பூட்டி அந்த சிறுமியிடம் குருவையா தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து யாரிடம் கூறினால் கொன்று விடுவேன் என கூறி மிரட்டி அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த சிறுமி நடந்தவற்றை யாரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குருவையா அந்த சிறுமிக்கு மீண்டும்  பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குருவைய்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.