19 வயது இளைஞரை 7 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கும்பல்
கரூரில், கடந்த 2021- ம் ஆண்டு விஷம் கலந்த மதுவைக் கொடுத்த துரோக செயலால் உயிர் நண்பரின் உயிரை பறி கொடுத்தும், இதில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் சசிகுமார், மதுவில் விஷம் கலந்து கொடுத்த சக தோழன் ஜீவாவை தனது 10 நண்பர்களுடன் சேர்ந்து 7 துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைத்து பழி தீர்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 19 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இம்மாதம் 22-ம் தேதியில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் சுந்தரவல்லி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜீவா காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர். ஜீவாவிடம் கடைசியாக பேசிய சசிகுமார் உள்ளிட்ட நான்கு நபர்களை பிடித்து விசாரித்த போது அந்த நான்கு நபர்கள் மற்றும் சிலர் சேர்ந்து ஜீவாவை வெட்டிக்கொன்று தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கும் சொந்தமான காலி இடத்தில் புதைத்து தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்த இரண்டு நபர்களை அழைத்துச் சென்று ஜீவா புதைக்கப்பட்ட இடத்தை காண்பிக்க வைத்தனர். தொடர்ந்து அந்த இடத்தில் டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் ஜீவாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து போலீசாரிடம் மேலும் விசாரிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கரூரில் மோகன் மற்றும் சசிக்குமார் ஆகிய இருவரும் விஷம் கலந்த மதுவை குடித்ததில் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிக்குமார் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வழக்கில் மது வாங்கி வந்த குணசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிறையில் இருந்து பிணையில் குணசேகரனிடம் ஏன் இப்படி செய்தாய்? என சசிக்குமார் மற்றும் நண்பர்கள் கேட்க, தான் மது வாங்கி வந்து கொடுத்ததோடு சரி, அதில் யார் என்ன கலந்தார்கள் என தெரியவில்லை என கூறியுள்ளார். அப்போ, மதுவில் விஷம் கலந்து கொடுத்தது ஜீவா தான் என தெரிய வந்தது. எனவே, ஜீவாவை வெட்டி கொன்றோம் என கைதான சசிகுமார், சுதாகர், மதன் கார்த்திக், பாண்டீஸ்வரன், ஹரி, ஹரி பிரசாத், சந்ரு, மதன் ஆகிய 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலையில் சம்மந்தப்பட்ட கவின் குமார், அருண்மொழி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூரில், 2021- ம் ஆண்டு உடனிருந்த உயிர் நண்பரை இரக்கமில்லாமல் கொன்றது சக தோழன் தான் என தெரிந்ததும் 3 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா பாணியில் பழிக்கு பழி தீர்த்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.