×

கடலூர் அதிமுக பிரமுகர் கொலையில் 3 பேர் கைது- அதிர வைக்கும் பின்னணி

 

கடலூர் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(46), அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் கடலூர் நகராட்சி கவுன்சிலர் ஆகவும் இருந்துள்ளார். தற்பொழுது அதிமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து இவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கொலை செய்யப்பட்ட புஷ்பநாதன் உறவினர்கள் மற்றும் அதிமுகவின் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து மூன்று கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அரசியல் எதிரிகள் இருக்கலாம் என்ற கோணத்திலும், உட்கட்சி பிரச்சனை இருக்கலாம் என்ற கோணத்திலும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை இருக்கலாம் என்று கோணத்திலும் இந்த விசாரணையானது சென்ற நிலையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சுப்ரமணியபுரம் திரைப்பட பாணியில் பழகத்திற்காக இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆடுகளை திருடி வந்து தொடர்ந்து புஷ்பநாதனிடம் விற்பனை செய்து வந்தனர். 


அந்த நேரத்தில் ஆடு திருடும்பொழுது இவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொள்ள இவர்கள் ஆடு திருட பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இவர்களுடைய வாகனங்கள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது, இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமினில் எடுக்கவோ அந்த வாகனத்தை போலீஸ் இடம் இருந்து மீட்டு தரவோ புஷ்பநாதன் எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்கும் புஷ்பநாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதுவே முன் விரோதமாக இருந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த நேதாஜி, அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதனிடையே தங்கள் பகுதியை சேர்ந்தவரே புஷ்பநாதனை கொலை செய்தது அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள நேதாஜி மற்றும் அஜயின் வீடுகளுக்குள் புகுந்து வீட்டை சூறையாடினர். இதனை அடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை புஷ்பநாதன் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கூறிய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது புஷ்பநாதனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் பாராட்டினார்.