பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! ஆசிரியையிடம் கதறிய சிறுமி... பகீர் பின்னணி
தாராபுரத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் வேளாண் துறை அதிகாரி போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகரில் வசித்துவருபவர் ஆண்டனி விக்டர் நோயல் (46). இவர் தனியார் வேளாண் துறை அலுவலகம் ஒன்றில் பீல்ட் ஆபீஸராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் 12-வயதில் ஒரு மகளும் உள்ளனர், மகள் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளியில் மாணவிகளிடையே தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து நடத்திய பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நீதிபதிகள் மற்றும் காவல் துறையினர் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து தெரிவித்த செய்திகள் அனைத்தையும் அறிந்த இச்சிறுமி, தனது பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் தனது தந்தை தனக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவது பற்றியும், இதனால் தனது உடலும் மனதும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தகவலாக கூறினார்.
சம்பவம் பற்றி அறிந்த பள்ளி ஆசிரியைகள் இது குறித்து மாணவியரின் தாயாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிர்ச்சி அடைந்த அவர், பெற்ற மகளையே பாலியல் தொந்தரவு செய்து வந்த தனது கணவர் ஆண்டனி விக்டர் நோயல் மீது தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி தனியார் வேளாண்மை துறை அலுவலகத்தில் பீல்ட் ஆபீசராக வேலை செய்து வரும் ஆண்டனிவிக்டர் நோயல் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.