×

நடத்தையில் சந்கேகம்! மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்

 

திருப்போரூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்  திருப்போரூர் கன்னியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 31), இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனின் சொந்த ஊர் கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமம். அனிதாவிற்கு சொந்த ஊர் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமம். 

இந்நிலையில் அடிக்கடி வெங்கடேசன் குடித்து விட்டு வந்து மனைவியை சந்தேகப்பட்டு அடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி கோபித்து கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விடுவாராம் வெங்கடேசன் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து திரும்ப அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேசன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.  

ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடிவந்த அனிதாவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்போரூர் போலீசார் அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை  பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.