×

பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை! சேலத்தில் நடந்த கொடூரம்

 

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே ரவுடி பீரோ பட்டறை சரவணன் (45) பனங்காடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே  வீராணம் அடுத்துள்ள வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன்(32) என்ற ரவுடி, பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தனது பட்டறைக்கு  காரில்   அரூர் சாலையில்  சென்று கொண்டிருந்த போது, வலசையூர் அருகே உள்ள பனங்காடு பகுதியில் எதிரே வந்த  மற்றொரு கார் வேகமாக வந்து சரவணனின் கார் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி சரவணன் காரை நிறுத்திய போது, எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய ஏழு பேர் கொண்ட  மர்மகும்பல் சடசடவென இறங்கி, சரவணனை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரவணன் உயிரிழந்தார். 

கொலையை அரங்கேற்றியவுடன், அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியது. அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காரிப்பட்டி காவல்துறையினர், உடனடியாக சாலையில் கொலையுண்டு கிடந்த சரவணனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா மற்றும் காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய் மூலம் தடயங்களை பதிவு செய்தனர்.  

விசாரணையில் கடந்த ஆண்டு  வீராணம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் பீரோ பட்டறை அதிபரும் ரவுடியுமான சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் காட்டூர் ஆனந்தனை கொலை செய்த கும்பலுக்கு சரவணன், பண உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ரவுடி சரவணனை  கொலை செய்ய காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் திட்டமிட்டார். இதனால் சரவணனுக்கும் கார்த்திக்  கும்பலுக்கும் விரோதம் ஏற்பட்ட நிலையில் இன்று, சேலம் அரூர் சாலையில் பனங்காடு அருகே காரில் வந்த சரவணனை, சினிமா பாணியில் காரை விட்டு மோதி, தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.