பிரபல ரவுடி மண்டை வெட்டு மாதவன் கொடூர படுகொலை! திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே ரவுடி மண்டை வெட்டி மாதவன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சீதேவிமங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கின்ற மண்டை வெட்டு மாதவன் (51). ரவுடியான இவர் மீது கஞ்சா, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் பிரபல ரவுடியான மண்ணச்சநல்லூர் குணாவின் கூட்டாளியான இவர், தற்போது சிறிய அளவிலான கட்டப்பஞ்சாயத்துகளில் மட்டும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மாநகரம் ஶ்ரீரங்கம் அருகே திருவானைக்காவல் சன்னதிவீதி தீட்ஷதர் தோப்பில் உள்ள கைலாச மண்டபம் முன்பு மாதவன் கொலைச் செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். நேற்றிரவு அவரை தீட்ஷதர் தோப்பிற்கு அழைத்து வந்த மர்ம நபர்கள், மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாதவன் மண்டையை வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்த, திருச்சி மாநகர காவல்துறை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, ஸ்ரீரங்கம் காவல்துறை ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து தடயங்களை சேகரித்தனர். மாதவனுக்கு நன்கு பழக்கமான நபர்கள் அவரை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்
அதன் அடிப்படையில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி திருவானைக்காவல் கோவில் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.