×

தங்கையின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற அண்ணன்!

 

கேளம்பாக்கம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு குழந்தைகளுடன் வசித்த பெண் சுகன்யா(38), இவரது கணவர் வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்த நிலையில், சுகன்யா அதே புதுப்பாக்கத்தில்  ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவரின் கடை அருகே மோட்டார்களுக்கு செம்பு கட்டும் எலக்ட்ரீஷியன் கடை நடத்திவந்தவர் பாலாஜி(26) (திருமணமாகதவர்). இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது,

இதனால் சுகன்யாவின் கணவர் வெங்கடேசனும், பாலாஜியின் தந்தை குமாரும் அவரவர் தரப்பில் இருவரையும் கண்டித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி சுகன்யா கடையில் இருந்தபோது தீடீர் தீப்பற்றி எரிந்ததில் சுகன்யாவும் அவரை காப்பாற்ற சென்ற அப்பகுதியினர் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் தீகாயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சுகன்யா மறுநாள் உயிரிழந்தார்.  இதனால் கேளம்பாக்கம் போலீசார் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது, கடையை பாலாஜியின் தந்தை குமார் பெட்ரோல் உற்றி பற்ற வைத்தது தெரிய வந்த நிலையில், குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று பாலாஜி கடையில் இருந்தபோது, மதியம் இரண்டு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாலாஜியை வெட்டிக்கொலை செய்து முகத்தையும் சிதைத்த நிலையில் தப்பியது. இந்த தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் பிரேத்தை கைப்பற்றி தடயங்களை சேகரித்த நிலையில் விசாரனையை துவக்கியபோது, ஏற்கனவே சுகன்யா சாவுக்கு பழிவாங்க பாலாஜி கொலை செய்து இருக்கலாம் என எண்ணி கொலையாளிகளின் வாகனங்களை மடக்கி பிடிக்க காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

அதன் பேரில் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடூ சுங்கசாவடியில் இரண்டு கார்களை  மடக்கி பிடித்து விசாரத்தபோது கொலை சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூரை சேர்ந்த சுகன்யாவின் அண்ணன் ரவி, மற்றும் அரவிந்த், ஸ்ரீபன் ராஜ், திருமாவேளன், சரவணன், ஆனந்தகுமார் ஆகிய ஆறு பேரை பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை செய்து வருகிறார்கள். தங்கை சுகன்யாவின் சாவுக்கு காரணம் பாலாஜிதான் என பழிவாங்கும் நோக்கில் கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட 6 பேர் கைதான சம்பவம் கேளம்பாக்கம் சுற்றுவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.