×

மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகள்! திருச்சியில் அதிர்ச்சி

 

திருச்சியில் மனநலம் பாதித்த மருமகள், தனது மாமியாரை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜர் நகர் அக்பர் அலி இவரது மனைவி சம்சாத் பேகம்(55) அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஆயிஷா பேகம் ( 22 ) என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயிஷா பேகம் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்து விடுவார் என்றும் ஏற்கனவே சம்சாத்தை தலையணை முகத்தில் வைத்து அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யவும் முயன்றதாககூறப்படுகிறது. நேற்று மாமியார் மருமகள் இருவரும் கீரனூரில் உள்ள தர்காவிற்கு சென்று வந்துள்ளார்கள். 

இந்த நிலையில் இன்று காலை சம்சாத் வீட்டில் இருந்தபோது , அவரை காய் நருக்கும் 2 கக்திகளால் இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் ஆயிஷா  குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சம்சாத் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆயிஷா பேகத்திற்கும் ஒன்பது மாத கைக்குழந்தைக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு  சென்று சம்சாத் பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.