வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை- மாமியார், மாமனார் கைது
காட்டுமன்னார்கோயிலில் திருமணம் ஆகி 4 ஆண்டுகளான பெண்ணின் சாவில் மர்மம் தாய் அளித்த புகாரில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மோவூர் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற மத்திய காவல் படை சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் (65), இவரது மகன் கயல் வேந்தன் (32) என்பவருக்கும் புவனகிரி தாலுக்கா சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் மகள் கயல்விழி (29), என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கயல்வேந்தன் அந்தமானில் வேலை பார்த்து வருகிறார். கயல்விழி தனது கணவர் கயல் வேந்தன் குடும்பத்தினருடன் மோவூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கயல்விழி தனது கணவர் வீடான மோவூர் கிராமத்தில் வீட்டில் நேற்று இரவு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளதாக கயல் வேந்தன் குடும்பத்தினர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் கயல் விழியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவரது தாயார் மகாலட்சுமி (49) காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரில் தன் பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் மேலும் அவரது மாமனார் செங்குட்டுவன் (65),மாமியார் பானுமதி (60), சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாகவும், என் மகள் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சேத்தியாதோப்பு துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இறந்த கயல்விழி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சேத்தியாதோப்பு துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து கயல்விழி சாவுக்கு காரணமாக இருந்த அவரது மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.