×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் யானை குளிக்க நீச்சல் குளம் திறப்பு!

 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை, திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா திறந்து வைத்தார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் செங்கமலம் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. பாப் கட்டிங் உடன் காட்சி அளிக்கும் இந்த யானை தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்டது. செங்கமலம் யானை குளிப்பதற்காக ரூ.75 ஆயிரம் மதிப்பில் ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோவில் யானையை குளிப்பாட்ட நீச்சல் குளம் அமைத்து தர வேண்டும் என மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா, சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கும் அமைக்கும் பணி நடைபெற்றது. 25 அடி அகலம் மற்றும் 9 அடி ஆழத்திற்கு நீச்சல் குளம் கட்டப்பட்டது.

பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று நீச்சல் குளத்தை எம்எல்ஏ டிஆர்பி ராஜா, திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, செங்கமலம் யானை குளத்தில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் மாதவன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.