×

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீரேற்று நிலைய பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்போது ஜப்பான் பான்னாட்டு நிதி உதவியுடன், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 3 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஒகேனக்கல் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அப்போது, துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் ஆட்சி மாற்றம்  ஏற்பட்டதால், கடந்த 2011-16 வரை அதிமுக ஆட்சியில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து, கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 3 மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இன்று தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஒகேனக்கல்லுக்கு வருகை தந்தார்.

அப்போது, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து நீரேற்று நிலையம் மற்றும் நீர் சேமிப்பு நிலையம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தருமபுரி எம்.பி செந்தில்குமார், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, ஆட்சியர் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.