விநாயகர் சதுர்த்தி… தருமபுரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ, ஊர்வலம் செல்ல தடை!
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதில் இல்லை என ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பினில், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரும் 15ஆம் தேதி வரையில் கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது..
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொதுஇடங்களில் சிலை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டுவதற்கு அனுமதி இல்லை. அதுபோன்ற சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநயாகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அமைப்புகளில் இச்செயல்களில் ஈடுபடுவது முழுமையக தடை செய்யப்படுகிறது.
தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை அருகில் உள்ள ஆலயங்களின் வெளிபுறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை இந்து சமய அறநிலையத்துறையால் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ் பிரிவு 51-60 மற்றும் இதச பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.