பென்னாகரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தருமபுரி
நிலுவை தொகை ரூ.500 கோடியை வழங்க வலியுறுத்தி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு விவசாய சங்க துணை தலைவர் அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பசும் பாலுக்கு விலை ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.52-ம் என உயர்த்தி வழங்கவும், ஆவின் பால் விலையை ரூ.52 என ஏற்றவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஆவின் பாலை பள்ளி சத்துணவில் சேர்த்து வழங்கவும், ஆவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யவும், பால் கொள்முதலுக்கான நிலுவை தொகை ரூ.500 கோடியை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் காரணமாக பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.