#TNagar “திமுகவை ஓரங்கட்டிய கமல் ” வெற்றி யாருக்கு?
பரபரப்புக்கு பஞ்சமில்லாத, சென்னையின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய தொகுதி தியாகராய நகர். சென்னையின் முக்கிய வணிக பகுதியான இங்கு பெரியது முதல் சிறியது வரை சுமார் 500ற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தி.நகர் தொகுதியில் பிரமாணர்கள், வன்னியர்கள் , தலித் சமூகத்தினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
அதிமுகவும் திநகர் தொகுதியும்….
தியாகராயநகர் தொகுதியில் 1991ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 460. 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து செல்லகுமார் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 476. 2001ஆம் ஆண்டு மறைந்த எம்எல்ஏ ஜெ .அன்பழகன் திமுக சார்பில் வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 875. இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த வி.பி. கலைராஜன் 74 ஆயிரத்து 131 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
2011 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த வி.பி.கலைராஜன் மீண்டும் தி.நகர் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 883. 2016 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த சத்தியநாராயணன் என்றழைக்கப்படும் தி நகர் சத்தியா 53 ஆயிரத்து 207வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நேரடியாக மோதும் திமுக vs அதிமுக
கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக 4 முறையும், திமுக , தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை அதிமுக சார்பாக மீண்டும் எம்எல்ஏ சத்யா களமிறக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவில் ஜெ. கருணாநிதி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் சகோதரர் ஆவார்.
தியாகராயநகர் மக்களின் குரல் – டாப் தமிழ் நியூஸ் கள நிலவரம்!
உங்கள் ஆதரவு எந்த கட்சிக்கு? என்ற கேள்வியை நாம் முன்வைத்த போது, அதிமுக என்ற பெயர் தான் ஓங்கி ஒலிக்கிறது. நாங்க எப்பவுமே இரட்டை இலை தாங்க; எம்ஜிஆருக்கு தான் ஒட்டு போடுவோம் என்றும் அதிமுக காரங்க வராங்க, வரல அது பிரச்னை இல்ல. ஆனால் எங்க ஓட்டு அதிமுகவுக்கு தான் என்று அடித்து கூறுகின்றனர். மற்றொரு புறம் ஸ்டாலின் தாங்க அடுத்த முதல்வர்; இவங்க என்னங்க செஞ்சாங்க; எதுவுமே செய்யல என்றும் சிலர் கூறியுள்ளனர்.
திமுக – அதிமுக இல்லாமல் 3வது அணிக்கு ஆதரவு என்றால் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வியின் போது, மக்கள் நீதி மய்யம் என்பது பலரின் சாய்ஸாக உள்ளது. அதேபோல் ஆளும் அதிமுக ஆட்சிக்கு 10க்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்ணும் குறைந்த பட்சமாக பூஜ்யமும் கிடைத்துள்ளது.
இங்குள்ள மக்களின் முக்கிய பிரச்னை சுகாதாரமின்மை என்றும் குடிநீர், சாலை வசதி போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் திநகர் தொகுதிக்குட்பட்ட வடபழனியில் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள கூட பூங்கா இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நமது கருத்து கணிப்பை பொறுத்தவரையில் தியாகராயநகர் தொகுதியில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே சமயம் திமுகவுக்கு இந்த தொகுதியில் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவிற்கு மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிக்கும் ஆதரவு உள்ளது வியப்பிற்குரியது.