×


குழந்தைகள் வார்டில் தீ விபத்து...10 குழந்தைகள் உடல் கருகி பலி!

 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.  

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்ற போராடினர். தீ விபத்து வார்டு முழுவதும் பரவியதால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதில் 10 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 17 குழந்தைகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.