×

கர்நாடகாவில் மளமளவென சரிந்த மண்- 5 பேர் பலி

 

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

உத்திர கன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா ஷிரூர் என்ற கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 12 ஆக உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்டபோது மலைக்கு கீழே இருந்த டீக்கடை மற்றும் வீடு முற்றிலுமாக மண் சரிவில் சிக்கியது. அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹோட்டல் உரிமையாளர் லக்ஷ்மண் நாயக், அவரது மனைவி சாந்தி நாயக் இவர்களின் மகன் 11 வயதான ரோஷன், மகள் அவந்திகா (வயது 6) இவர்களது உறவினரும் லாரி ஓட்டுனருமான ஜெகநாத் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். 

மீட்புப் பணியில் தற்பொழுது வரை சிறுமியும் உடலைத் தவிர நான்கு நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மீட்பு பணி துவங்கிய போது சுமார் ஏழு பேர் உள்ளே சிக்கி இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியானது. தற்பொழுது மண் சரிவில் ஒட்டுமொத்தமாக பத்து முதல் 12 நபர்கள் மண் சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மண் சரிவு ஏற்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஒருபுறம் மலைத்தொடர் மறுபுறம் கங்காவதி நதி இருக்கும் நிலையில் மண் சரிவின் போது சிலர் நதியில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்த நிலையில் நதியிலும் தற்பொழுது தேடுதல் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நதியில் சிக்கியுள்ள கேஸ் ட்ரங்கர் லாரியை மீட்கும் பணியிலும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.