ஹைதராபாத் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு : வாரியத் தலைவர் மகன் உள்பட 3 பேர் கைது..
ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் , வாரியத்தலைவர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்திருகின்றனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல பப்பில் கடந்த 28ம் தேதி மதுவிருந்து நடைபெற்றுள்ளது. இதில் 17 வயது மைனர் பெண் ஒருவர் , நண்படன் பங்கேற்றுள்ளார். பார்ட்டி முடிந்து வெளியே வந்த அந்தப்பெண்ணை, அதே பார்ட்டியில் பங்கேற்ற சில இளைஞர்கள், வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த சொகுசு காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் சுமார் 2 மணிநேரம் ஹைதராபாதை சுற்றி வந்தபடி, அந்த பெண்ணை காரிலேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணை மீண்டும் பப்புக்கு எதிரே கொண்டுவந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். பப்புக்கு முன் நிறுத்தியிருந்த மற்றொரு காரையும் எடுத்துக்கொண்டு 2 கார்களில் அங்கிருந்து சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 17 வயது பெண், தனது தோழிக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததும், அந்த பெண்ணின் தந்தௌ ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த பெண்ணிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவன் சிறுபான்மை நலவாரிய தலைவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் உள்துறை அமைச்சர் முகமது அலியின் பேரனும் இருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து தெலங்கானா அரசு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சிறுபான்மை நலவாரிய தலைவர் மகன் மற்றும் அவரது நண்பர் மகன் ஆகிய 17 மற்றும் 16 வயது சிறுவர்கள் மற்றும் காதர்கான் என்பவர் என 3 பேரை தற்போது போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அத்துடன் 2 கார்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.