×

பெண்களிடம் நட்பாக பழகி சயனைட் கொடுத்து கொன்று நகையை பறித்து செல்லும் கும்பல்

 

அதிக நகை, பணம் வைத்திருப்பவர்களிடம் நட்பாக பழகி  உணவு, குளிர்பானத்தில் சைனட் கலந்து கொடுத்து வரிசையாக கொலை செய்து வந்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், செப்ரோலு மண்டலம்  வட்லாமுடி கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் இறந்த நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரனைக்கு பிறகு அது ஷேக் நாகூர் பி என்று அடையாளம் காணப்பட்டது. இருப்பினும்  ஆரம்பத்தில் மரணத்திற்கான காரணம் தெரியாத வழக்காகப் பதிவுசெய்யப்பட்ட நிலையில் ஷேக் நாகூர் பி  மகன் ஷேக் தமீஜ்ஜிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது  ரஜனி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோருடன்  அவ்வப்போது பேசி வந்ததாக கூறினார். இதனையடுத்து  போலீசார் செல்போன் டவர் சிக்னல்  மற்றும் தொழில்நுட்ப ஆதரங்களை வைத்து விசாரணை செய்ததில் மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கண்டுபிடித்தனர்.  

மகேஷ் ஜூன் 5, 2024 அன்று ஷேக் நாகூர் பி மற்றும் அவருடன் மூன்று பெண்களை வட்லமுடி சந்திப்பிற்கு அழைத்து சென்றதாக கூறினார்.  மேலும் அந்த மூன்று பெண்கள் ஆட்டோவில் குளிர்பானத்துடன் பயணம் செய்ததாக கூறினார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குண்டூர் மாவட்டம்  தெனாலியில் உள்ள யாட்லா லிங்கய்யா காலனியில் வசிக்கும் முனகப்பா ரஜனி (40), முடியலா வெங்கடேஸ்வரி (32), கோந்து ரமணம்மா (60) ஆகியோரை பிடித்து விசாரித்ததில்  கூட்டாக சேர்ந்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஷேக் நாகூர் பி இறந்த நாளில் அவரிடம் நட்பாக பழகி திட்டமிட்டு கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சயனைடு கலந்த குளிர்பானத்தை வழங்கி குடிக்க வைத்துள்ளனர். கொடிய சயனைட் உட்கொண்டவுடன், ஷேக் நாகூர் பி அணிந்திருந்த தங்க ஆபரணங்களைத் திருடி கொண்டு உடலை வயலில் அப்படியே  விட்டு சென்று விட்டதாக கூறினர். மேலும் இதே போன்று மேலும்  மூன்று கொலைகள் செய்ததும் மேலும் இரண்டு பெண்களைக் கொல்ல முயற்சித்திருப்பதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். 

இந்நிலையில் இந்த பெண்களுக்கு சயனைட் எப்படி கிடைத்தது? இவர்களுக்கு சயனைட் வாங்குவதற்கு உதவியவர்கள் யார்? கொலைக்கு வேறு யாராவது உதவினார்கள் போன்ற விவரங்களை விசாரித்து வருகின்றனர்.