×

எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மியால் I.N.D.I.A. கூட்டணிக்குள் சலசலப்பு

 

I.N.D.I.A. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தனது பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால்  பெயரை முன்மொழிந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை குறித்து எதிர்க்கட்சிகள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்கள் கட்சி தலைவரின் பெயரை பிரதமர் வேட்பாளராக கூறி வருகின்றன. உதாரணமாக காங்கிரஸ் கட்சி தங்களது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் பதிலளிக்கையில், கெஜ்ரிவால் எப்போதுமே லாபம் மற்றும் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ஒரு செய்தி தொடர்பாளராக, எங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை முன்மொழிகிறேன். மக்களுக்கு நன்மை செய்யும் மாடலை கொடுத்துள்ளார். அது நடக்க  வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் முடிவு என் கையில் இல்லை என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறுகையில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் தலைவர் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆம் ஆத்மி உறுப்பினர்களும் தங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் (அரவிந்த் கெஜ்ரிவால்) பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் ஏற்கனவே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம், அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.