×

புவியின் 4வது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்!

 

ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 
 
 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 02ம் தேதி  பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுவட்ட  பாதையின் உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி  2-வது முறையாகவும், 10 தேதி மூன்றாவது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 
 

ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆதித்யா எல்.1 விண்கலம் பூமியை குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தூரத்திலும் அதிகபட்சம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வருகிறது. அதித்யா விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.