×

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரண்

 

கடந்த 2002  ஆண்டு ஏற்பட்ட  குஜராத் கலவரத்தின் போது,  பில்கிஸ் பானு  மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை  30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.  இந்த கொடூர தாக்குதலில் பில்கிஸ் பானுவின் சிறுவயது மகள் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர்.  அப்போது 19 வயது பெண்ணான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் .  பில்கிஸ் பானு மட்டுமின்றி அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் அந்த கலவர கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.   நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும்   தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில்  மறு ஆய்வு  மனு தாக்கல் செய்தார்.  பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி,  குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.  இதன் மூலம் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின்  உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் சரண். சரணடைய கூடுதல் அவகாசம் கேட்ட 11 பேரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கடந்த 2022ல் 11 பேரையும் விடுவித்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் சரணடைய அவகாசம் அளித்து இருந்தது. இதன் காரணமாக  11 குற்றவாளிகள் மீண்டும் சிறைக்கு சென்றனர்.