×

போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தவர் மயங்கிவிழுந்து பலி! திருமண மேடையில் நடந்த சோகம்

 

நண்பரின் திருமணத்தில் நினைவு பரிசு வழங்கி சிரித்து கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் மேடையிலே மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் பெனுமடா கிராமத்தை சேர்ந்த வம்சி  பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் அவரது சொந்த ஊரில்  நண்பரின் திருமணத்திற்காக நேற்று ஊருக்கு வந்தார். திருமணத்தில் நண்பர்களுடன் ஜாலியாக ஆடி பாடி கொண்டிருந்த வம்சி, மேடையில் புதுமண தம்பதிக்கு நினைவு பரிசை நண்பர்களுடன் சென்று வழங்கினார். அப்போது அனைவரும் சிரித்து கொண்டே போட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த நிலையில் புதுமண தம்பதி நினைவு பரிசை பிரித்து கொண்டிருந்தபோது வம்சி சிரித்து கொண்டே மேடையில் சரிந்து விழுந்தார். 

உடனடியாக சக நண்பர்கள் அவரை பிடித்து, அவரை டோன் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால், இறந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவருடனும் சிரித்து பேசி கொண்டிருந்த நண்பர் திருமண மேடையிலேயே இறந்தது திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.