×

இந்துக்களை அவமானப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்- அமித்ஷா

 

ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “சிவன், ஏசு மக்களுக்கு ஆசி வழங்குவது ஒரே அடையாளத்தில் தான். காங்கிரஸின் சின்னமும் அதுதான். சிவனின் அபய முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னம். சிவ பெருமானின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் சின்னம் அல்ல, அது அகிம்சையின் சின்னம். மிகப் பெரிய மனிதர்கள் அனைவரும் அகிம்சை, பயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு உள்ளிட்ட எண்ணங்களோடு பேசுகிறார்கள்” என பேசினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது ராகுல் காந்திக்கு தெரியாது. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த அவை பொய் பேசுவதற்கான அவை அல்ல, ராகுல் காந்தி தான் கூறியதற்கான ஆதாரத்தை அவையில் சமர்ப்பிக்க வேண்டும். ராகுல் காந்தி தான் கூறியதற்கான ஆதாரத்தை முன்வைக்கவில்லை என்றால், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...


ராகுல் காந்திக்கு டியூஷன் நடத்துங்கள். படத்தை காட்டக்கூடாது என்று தெரிவித்த பிறகு மீண்டும், மீண்டும் அவர் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. மற்றவர்களுக்கு உள்ள விதிகள் அவருக்கு மட்டும் பொருந்தாதா என்ன? அவசர நிலையின்போது ஒட்டுமொத்த தேசத்தையும் சிறையில் அடைத்தவர்களுக்கு அபயம் பற்றி பேசி அருகதையில்லை. சபாநாயகரின் வழிகாட்டுதலை மீறி ராகல் மீண்டும் மீண்டும் படங்களை அவைக்கு காட்டுவது விதிமுறை மீறல். இந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக ராகுல்காந்தி கூறியது தவறு.  தேசத்தின் கோடிக்கணக்கான இந்துக்களை அவமதித்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.